23 ஆண்டுகளாக செய்யாத குற்றத்திற்காக சிறையில் அடைபட்டிருக்கும் தன் மகனை மீட்க ஒரு அம்மா சிறைக்கும் கோர்ட்டுக்கும் நடையாய் நடந்த கதை அது.
படிக்க படிக்க இப்படியெல்லாம் ஒருவர் வாழ்வில் நடக்குமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது.
அற்புதம் அம்மா ஒரு இடத்தில் சொல்கிறார்.. `` நீதி மறுக்கப்படும் ஒவ்வொரு முகத்திலும் நான் தங்கமான என் மகனின் முகத்தை காண்கிறேன்..”
எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்.
வேறு எந்த புத்தகத்திற்குமில்லாத பரிந்துரையை இதற்கு ஏன் செய்கிறேன் என்றால் மறுக்கப்பட்ட நீதி தூக்கு கயிற்றில் தொங்கவிட தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பேரறிவாளன் உங்களிடம் எதிர்பார்பப்து கருணையோ உயிர் பிச்சையோ அல்ல.. நீதி கேட்கிறார்.
ஆனால் இந்திய கூட்டு மனசாட்சியோ எப்படியேனும் அவரை பலி கொடுக்க துடிக்கிறது.
தமிழில் எவ்வளவு அப்பாடக்கர் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.. ஒருத்தருக்கும் கூட ஒரு அம்மா ஜோல்னா பையும் ரப்பர் செருப்புமாக சிறைக்கும் நீதிமன்றத்திற்கும் 23 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கும் கதையை எழுத வேண்டும் என்று தோன்றவில்லை..
ஆனால் மலையாளத்திலிருந்து தமிழகம் வந்த `மாத்யமம்’ என்ற பத்திரிகையின் நிருபர் அனுசிரி என்பவர் அந்த வரலாற்று பணியை செய்திருக்கிறார். (சகோதரி.. நீங்கள் யார் என்று தெரியவில்லை.. ஆனால் எங்கள் குலசாமிகளில் ஒருத்திம்மா நீ.. )
மலையாளத்தில் வெளியாகிய புத்தகத்தை தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்து பெரும் கடமையை செய்திருக்கிறார் யூமா வாசுகி.
இந்த புத்தகத்தை நீங்கள் ஒருவர் மட்டும் படிக்க வேண்டும் என்பதல்ல என் கோரிக்கை.. குறைந்த பட்சம் ஒரு 5 பேருக்கு புத்தகத்தை வாங்கி படிக்க கொடுங்கள்..
மகனை மீட்க போராடும் அற்புதமான அம்மாவின் நீதிக்கான பயணத்தில் நீங்களும் கைக்கோர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
-கார்ட்டூனிஸ்ட் பாலா5-2-14
There are no reviews yet